×

திருவருள் புரியும் திரிபுரசுந்தரி

தமிழக சக்தி பீடங்கள்

திருக்கழுக்குன்றம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவில் புராண வரலாற்று சிறப்பு மிக்கத் திருத்தலமாகும். வேதங்கள் மலை வடிவில் வந்து தவம் செய்த தலம் இதுவாகும்.
அந்த மலையின் மீதே வேதகிரீஸ்வரர் வீற்றிருந்து அருட்பாலிக்கிறார். முனிவர்கள் 8 பேர் கழுகு உருவில், இத்தலத்து இறைவனை வழிபட்டதால் ‘திருக்கழுக்குன்றம்’ என்று பெயர் பெற்றது. ஒரு சமயம் வேதங்கள் அனைத்தும் சிவபெருமானிடம் வந்து தொழுதன. ‘இறைவா! இந்த உலகம் அழியும் காலத்திலும், வேதங்களாகிய நாங்கள் அழியாமல் உங்கள் திருவடியின் கீழ் நிலைபெற்றிருக்க வேண்டும்’ என்று வேண்டின. அதற்கு சிவபெருமான், ‘நீங்கள் ஒரு மலை வடிவாய் நில்லுங்கள். அங்கு நான் சிவலிங்க வடிவில் நீங்கள் செய்யும் பூஜையை ஏற்றுக் கொண்டு ஞான சொரூபமாய் இருந்து அருள்வேன். அந்த இடம் வேதகிரி என வழங்கப்படும்’ என்றார்.

அதன்படி ருக்வேதம் அடியாகவும், யஜூர் வேதம் மத்தியிலும், சாமவேதம் மேற்பகுதியாகவும், அதர்வணவேதம் மலையின் சிகரமாகவும் அமைந்தன. வேதமே மலையாய் இருப்பதால் இந்தலம் வேதகிரி என பெயரை பெற்றது. வேதாசலம், கதலிவனம், கழுகுன்றம் என்று, இந்தலத்துக்குரிய வேறு பெயர்கள்.

மூலவர் வாழைப் பூக்குருத்துப் போலன்றி சுயம்புலிங்க மூர்த்தியாக, வேதகிரீஸ்வரர் என்ற பெயரிலும், அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் கூட எழுந்தருளும் தலம் இது.  கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுகுன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்ற கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்ற கழுகுகளும், மூன்றாம் யுகம் சம்பூகுத்தன், மாகுத்தன் என்ற கழுகுகளும், நான்காம் யுகம் சம்பூ, ஆதி என்ற கழுகுகளும் வழிபட்டன. மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து சில வருடங்கள் முன்பு வரை உணவு பெற்றுச் சென்றிருக்கின்றன. இப்பொழுது அவைகள் வருவதில்லை. மலைக்கோயிலுக்கு ஏறிச் செல்லும் படிகள் வழியாகவே இறங்கி வரலாம்.

இங்கு தஞ்சாவூரில் நடைபெறும் மகாமகம் போல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்னும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. பொதுவாக உவர்நீரில்தான் சங்கு தோன்றும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆலயத்தில் உள்ள நன்நீர் நிறைந்த குளத்தில், ஒரே ஒரு சங்கு பிறந்து வெளி வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். அவ்வாறு தோன்றும் சங்கைதான், சங்குதீர்த்த புஷ்கர மேளாவின் போது, இறைவனை அபிஷேகம் செய்ய பயன்படுத்துவார்கள்.

இந்த நிகழ்வே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.  இன்று வரை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இங்குள்ள குளத்தில் சங்கு பிறக்கிறது. சங்கு பிறப்பதற்கு முதல் நாள் குளம் முழுவதும் நுரையாகக் கிளம்பும். பின்னர் அக்குளத்தில் தோன்றும் சங்கு, ஒரு ஓரமாக மிதந்து வரும். அதை கோயிலிலுக்குள் மேள தாளம் முழங்க எடுத்துச் சென்று, இறைவனின் சிறப்பு அபிஷேகங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

தாழக்கோவில்: இக்கோவில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இவற்றில் 7 நிலை கிழக்கில் உள்ள கோபுரமே ராஜகோபுரம். ஆலயம் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு 4 கால் மண்டபம் உள்ளது.

அம்பாள் சந்நதியைச் சுற்றி வலம்வர வசதி உள்ளது. உள்ளே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அம்மன் திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகின்றாள். அம்பிகைக்கு தினமும் பாதத்தில் தான் அபிஷேகம் நடகிறது. ஒராண்டில் மூன்று நாட்கள் மட்டுமே (ஆடிப்பூரம் 11 வது நாள், நவராத்திரி 9 ம் நாள், பங்குனி உத்திரம் இரவு) திருவுருவம் முழுவதும் முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு எதிரில் பிரத்தியேக சந்நதி உள்ளது.

Tags : Thiruvarul ,Tripurasundari ,
× RELATED நம் வீடு… நம் ஊர்… நம் கதை…